புதன், ஏப்ரல் 24

முடிவில்லா காதலுக்கு இதுவும் ஒரு முன்னுரை....

அன்றொரு நாள்  உன்னை எனக்குள் பதியம் போட்டு வைத்தேன் .அன்று முதல் என்னை மெல்ல மெல்ல உறிஞ்சி இன்று ஒரு நதியாய் உருவெடுத்துவிட்டாய் .....
           இன்னும்  சற்று தூரத்தில் என் காதல்  கடல்போல் பரந்துவிரிந்து காத்துக் கிடக் கிறது நீ வந்து கலந்துவிடுவாய் என்ற நம்பிக்கையில் ....
           உன் பாதைகளின் இருமருங்கிலும் என் கவிதைமரங்கள் பூத்து நிற்கின்றன உன்மேல் நேசப்பூவை அள்ளிப்பொழிய ...
             கடைசியில் நானும் கடைசி வரியில் காத்துக்கொண்டிருப்பேன்....
              காத்திருப்புகள் களவுபோனாலும்
                                                    தீராத காதலுடன் ....

வியாழன், ஏப்ரல் 18

என்னுரை...என் எல்லாபதிவுகளுக்கும்..



என் காதலில் உள்ள அத்தனை சுவாரஸ்யங்களையும் அவஸ்தைகளையும் என் எழுத்துக்களால் முழுமையாக உணர்த்தமுடியுமா என்று தெரியவில்லை...ஆனாலும் என் கண்மணியே என்றாவது ஒருநாள் நீ இவற்றையெல்லாம் படிப்பாய் என்ற நம்பிக்கைதான் என் எழுத்துகளுக்கு உயிரினை ஊற்றிக்கொண்டிருக்கிறது.
 நான் இன்றுவரை எத்தனையோ இதயங்களுடன் பழகி பயணித்துவிட்டேன்...சிலர் சில நொடிகளிலேயே நினைவில் இருந்து நீங்கிச்சென்றார்கள்..சிலர் சிலநாள் என்னோடு பயணித்தார்கள்...பலர் என் எல்லா பயணங்களிலும் என்னோடு கைகோர்த்து நடந்து வந்தார்கள்..இப்படி என்னோடு பழகிய,பயணித்த எத்தனையோ இதயங்களின் பாதச்சுவடுகள் என் மனதிலும் நினைவிலும் புதைந்து கிடக்கின்றன.இவர்கள் யாவரும் என் இதயத்தில்,என் பயணத்தில்,என் பாதையில் சில மில்லிகிராம் மாற்றங்களை மட்டுமே தந்துசென்றார்கள்.ஆனால் நீ மட்டும்தான் முதன்முதலாய் என் பாதையை,பயணத்தை உன்னை நோக்கியிழுத்து காதலிடம் தள்ளிவிட்டாய்.உன் வருகைக்கு முன் நான் என்ன நினைக்கிறேன் என்பதை பிறர் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு என் சலனங்களையும் உணர்வுகளையும் விழிகளுக்குள்ளேயே புதைக்கும் பக்குவம் என்னிடம் இருந்தது.இப்போதென்னவோ எல்லாம் தலைகீழாய்...
இப்போதெல்லாம் நான் உறங்குவதேயில்லை...
காரணம்...
 எப்போதும் உனக்காக காத்துகிடக்கிறேன்...
உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே கனவுகளோடும்...
கண்ணுக்கும் கண்ணீருக்கும் இடையே காதலோடும்...
உண்மையில்
 உன்னை அறிமுகப்படுத்திய அந்த பேருந்துதான் எனக்கு கடவுள்...
அதன் ஜன்னலோர இருக்கைகள்தான் என் வழிபாட்டுரிய பொருள்...
உண்மையில்
இந்த பூமி சுற்றிக்கொண்டிருப்பதை  நம்மால் உணரமுடிவதில்லை...
அதுபோலதான் உன்னையே சுற்றிச்சுற்றிவரும் என்னையும் உன்னால் உணரமுடியவில்லை...
எல்லா நதிகளும் கடலைத்தான் சேர்கின்றன
ஆனாலும்
 கடலில் நதிகள் தெரிவதில்லை.
என் காதலும் அப்படித்தான்...
நீ என்னுள் நுழைந்து கலந்தபோதும் என் காதல் உன் விழிகளுக்கு இன்னும்  வெளிச்சமாகவில்லை
.உன் விழிகளுக்கு வெளிச்சமாகாமல் என்னுள் புதைந்துகிடப்பது வெறும்காதல் மட்டுமல்ல
களவுபோன உனக்கான என் காத்திருப்பகள்...
உன் அழகில் விளைந்த அவஸ்தைகள்...
உன் பிரிவால் தோன்றிய பிரௌயங்கள்...
மனதில் விழுந்து விரல்களில் முளைத்த கவிதைகள்...
இவற்றையெல்லாம்விட
 என் சிந்தனையை திருகிவிட்ட,
 என் சிந்தையை சிறையிலிட்ட
                உன் மௌனம்...
இப்படி என்னுள் புதைந்துகிடக்கும் இவையாவும் தொட்டுப்பார்க்க முடியாத, நான்மட்டுமே உணர்ந்து பார்த்த என் இறந்தகால நினைவுகள்.ஆனாலும் இவையாவும் என் வாழ்க்கையில் புதிதாய் முளைக்கத்துடித்த என் காதலின் முயற்சிகள் என்பதை மறுக்க மறக்கவோ என்னால் முடியவில்லை.அதனால்தான்  புதைந்துகிடந்த நினைவுகளை  தோண்டியெடுத்து தூசிதட்டி துடைத்துள்ளேன்.
ஒவ்வொரு நினைவிலும், அதை கூறுகின்ற ஒவ்வொரு வார்த்தையிலும் என் உயிர் ததும்பிக்கொண்டிருக்கும்...
                                                                               தீராத காதலுடன்...
                                                                       கண்மணியின் காதலன்.